tamilnadu

img

பழைய சொல், புதிய தேடல் ‘ஐ’- அண்டனூர் சுரா

‘டிக்டாக் வீடியோக்கள் என்ன சொல்கின்றன?

- இந்து தமிழ் - பெண் இன்று இதழில் பிருந்தா சீனிவாசன் எழுதிய ஒரு கட்டுரை. வீட்டிலும் வெளியிலும் பெண்களுக்குப் போதுமான அங்கீகாரம் கிடைப்பதில்லை. அதிலிருந்து மீளத்தான் இப்படிப் பொதுவெளியில் தங்களை முன்னிலைப் படுத்திக் கொள்கிறார்கள் என்கிறார் அவர். ஆனால் சேலம் அரசு மனநல மருத்துவர் அபிராமி, ‘ஆணோ, பெண்ணோ டிக்டாக், முகநூல் வழியே தங்களை முன்னிலைப் படுத்திக் கொள்வதை ‘ நார்சிசம்’ என்கிறார். அது என்ன நார்சிசம், இதற்கு நிகரான தமிழ்ச்சொல் தொன்மைத் தமிழில் உண்டா?

கிரேக்க இதிகாச கதையில் நார்சிசஸ் என்றொரு கதாப்பாத்திரம். தன் முகத்தை ஒரு நாள் ஏரியில் பார்க்கிறான். அவன் முகம் அவனுக்குப் பிடித்துப் போய்விடுகிறது. ஒவ்வொரு நாளும் அவனது முகத்தைப் பார்த்து ரசிக்கிறான். ஒரு நாள் அவனது முகத்தின் மீது அதீத மோகம் வர ஏரியில் தெரியும் அவனது முகத்தைக் கட்டித் தழுவ நீரோடையில்  குதித்து உயிரை மாய்த்துக்கொள்கிறான்.

Tiktok என்கிற வீடியோ naarcissim personality disorder என்கிற நோயியத்தை ஏற்படுத்துவதாக மனநல மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

Tiktok  - ஜான் ஸ்லாடெக் எழுதிய ஒரு அறிவியல் புனைவு நாவல். இந்த நாவலின் கதாபாத்திரமான Ozma என்கிற மனித ரோபோ, வீட்டு முதலாளி எதிர்ப்பார்க்கும்  அனைத்து வேலைகளையும் செய்து முடிக்கிறது. ரோபாவைப் பார்த்து பிரமிக்கும்  முதலாளி தன்னை  ரோபோவாக நினைத்துக்கொள்கிறார். தனக்குத்தானே சிலை வைத்துக்கொள்ளல், தன்னைப் பற்றி தானே புகழ்ந்து கொள்ளல், தன்னை சுயபடம் எடுத்து முகநூலில் பதிவிடுதல் யாவும் நார்சிசமே .

Naarcisssim என்கிற சொல்லுடன் தொடர்புடைய சொல் megalomania. அதாவது தற்புகழ்ச்சி. ஐவகை இலக்கணங்களில் ஒன்று ‘அணி’. அணியில் ஒரு வகை  ‘தற்புகழ்ச்சி அணி’. உதாரணம், ‘பிறர் முதுகில் சாரா என் கையில் சாரம்’. அதாவது, நான் எப்போரிலும் முதுகுப்புண் கண்டதில்லை என தன்னை புகழ்ந்து கொள்ளும் மன்னிடம் மற்றொரு மன்னன், என் அம்புகள் தோற்றோடும்  புறமுதுகில் பாய்வதில்லை என புகழ்ந்துக்கொள்வது. தன்னைத் தானே புகழ்ந்துகொள்வதை வள்ளுவர் சிறுமைத்தனம் என்கிறார். ‘பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து’. ‘உடையது விளம்பேல்’ (உனக்குள்ள சிறப்பினை நீயே புகழ்ந்து கூறாதே); வல்லமை பேசேல் (உனது திறமையை நீயே புகழ்ந்து பேசாதே) என்கிறது ஔவை ஆத்திசூடி. ‘கூரம் பாயினும் வீரியம் பேசேல்’ என்கிறது கொன்றை வேந்தன். தன்னைத் தானே புகழ்ந்துகொள்வது சில இடங்களில தேவை என்கிறது இலக்கண நூலான நன்னூல். ‘மன்னுடை மன்றத்து ஒலைத் தூக்கினும் / தன்னுடை ஆற்றல் உணரார் இடையிலும் / மன்னிய அவையிடை வெல்லுறு பொழுதினும் / தன்னை மறுதலை பழித்த காலையும் / தன்னைப் புகழ்தலுநம் தகும்புல வோற்கே (நன்னூல் 53).

தன்னைத்தானே ரசிக்கும் செயலை குறிக்கும் வகையில், உளவியல் நிபுணர் சிக்மண்ட் பிராய்டு உருவாக்கிய சொல் ‘நார்சிசம்’. கண்ணாடியில் அடிக்கடி முகம் பார்ப்பவர்கள்;  நின்று கொண்டிருக்கும் கார் கண்ணாடியில் தன்னைப் பார்த்து ரசிப்பவர்கள்; அதிகமாக சுயபடம் எடுத்துக்கொள்பவர்கள்; முகநூலில் தன்னைக் குறித்த பதிவுகளை இடுபவர்கள்,... அனைவரும் நார்சிஸ்டு வகையினரே. ஷங்கர் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்த திரைப்படம் ‘ஐ’. நார்சிசஸ் கிரேக்க கதாப்பாத்திரத்தை மையமாகக் கொண்டது.

ஐ என்பதற்கு தமிழ் அகராதி அரசன், அழகு, இருமல், ஒரு சாரியை, ஒரு தொழிற் பெயர் விகுதி, ஒரு பண்புப்பெயர் விகுதி, கடவுள், கடுகு, கருவிப்பொருளில் வரும் ஒரு பெயர் விகுதி, குரு, கோழை, தலைவன், சர்க்கரை, சவ்வீரம், சிவன், தண்ணீர் முட்டான் கிழங்கு, செயப்படுபொருளிலே வரும் ஒரு பெயர் விகுதி, தும்பை, துர்க்கை, நுண்மை, பருந்து, தந்தை, பெருநோய், யானைப் பாகனின் மொழி, ஆனந்த ஓசை, வினைமுதற் பெயரிலே வரும் ஒரு பெயர் விகுதி,வெண்ணெய், வியப்பு, ஐந்து, ஐயம், ஓர் இடைச்சொல், கணவன், மருந்து என்பதாகப் பொருள் தருகிறது. ஐயை (தலைவி), ஐயன் (தலைவன்) ஐ என்கிற சொல்லிலிருந்து பிறந்தவை.

ஆங்கிலத்தில் I (ஐ), நான்  மனநிலை என்பது நார்சிசம். தன்னைத்தானே புகழ்ந்து கொள்வதை  இலக்கண நூல் தண்டியலங்காரம், ‘தான்றற்புகழ்வது தன்மேம்பாட்டுரை’ என்கிறது. நார்சிசம் என்பது பிறர் மத்தியில் தன்னை மெச்சும்படியாக அலங்காரப் படுத்திக்கொள்வது. அதாவது சுயமோகம் கொள்வது. இதை நன்னூல் மொழியில் ‘ஓரலங்காரம்’ என்று சொல்லலாம்.